Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
அந்தரத்தில் பயணித்தவாறு பழனி மற்றும் கொடைக்கானல் மலைகளின் அழகை ரசித்தவாறும் வயல்வெளிகளை பார்த்தவாறு பயணிப்பது பக்தர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் பக்தர்கள் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற டிசம்பர் 22ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b