Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்புகளின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க புதிய நீர்த்தேக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக 4375 ஏக்கர் பரப்பளவில் 1.655 டி.எம்.சி கொள்ளளவுடன் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் அளவுக்கு 9 மாதங்கள் குடிநீர் வழங்க ஏதுவாக, ரூ.350 கோடி மதிப்பில், விரிவான திட்ட அறிக்கை நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதலுக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கொக்கிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர்தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழுங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழுங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கொக்கிலமேடு கழிமுகங்களுக்கு வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. புதிய நீர்த்தேக்க பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாக அனுமதியை பெறுதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் பணிகளும் இத்திட்டத்திற்கான நீர்வளத்துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் வரும் 29ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முதல்வரால் தொடங்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b