முதல்வர் ஸ்டாலினுக்கு திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு
திருநெல்வேலி, 20 டிசம்பர் (ஹி.ச.) தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (டிசம்பர் 20) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு
முதல்வர் ஸ்டாலினுக்கு திருநெல்வேலியில்  உற்சாக வரவேற்பு


திருநெல்வேலி, 20 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (டிசம்பர் 20) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து முதல்வர் சாலை மார்க்கமாக திருநெல்வேலி வருகை தந்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.

இன்று மாலை 5:30 மணியளவில் நாகர்கோவில் சாலையில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் சி.எஸ்.ஐ , கிறிஸ்தவ அமைப்பின் தரிசன பூமி வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். அங்கு அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பிறகு, இரவு 7:30 மணிக்கு பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

இரவில் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கிறார்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ 72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நாளை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Hindusthan Samachar / vidya.b