Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 டிசம்பர் (ஹி.ச)
கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று (டிசம்பர் 19) பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் இந்த மாதம் 30 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 4 ஆம் தேதி சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள், மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் கடந்த 3 ஆம் தேதி கார்த்திகை தீபம், 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறி விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு சேலம் மாநகர் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
ஓமலூர், இரும்பாலை ரோடு, சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், அதற்கான தேதி விரைவில் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் கூறினர்.
தேதி இறுதி செய்யப்பட்டவுடன் முறைப்படி காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b