Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 20 டிசம்பர் (ஹி.ச.)
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த திட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றி, மத்திய அரசு தனது சர்வாதிகாரத்தனத்தை காட்டியுள்ளது.
காந்தியின் பெயரை நீக்கியதன் மூலமாக அவர்களுக்கு (பாஜகவினர்) இன்னும் அவர் மீதான கோபம் குறையவில்லை என்பது தெரிகிறது.
இந்நிலையில், புதிய மசோதாவில் 60 சதவீதம் நிதி தான் ஒதுக்கப்படும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 125 நாட்கள் வேலை நாள் உயர்த்தப்படும் என புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதுவும், இத்திட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை தான். முக்கிய மசோதா தாக்கல் செய்யப்படும் போது, பிரதமர் அவையில் இல்லாமல் வெளிநாடு சென்றுவிட்டார். இது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து பேசிய தமிமுன் அன்சாரி,
எஸ்ஐஆர் என்பது என்.ஆர்.சி.யின் நகல்தான். பீகாரில் நடைபெற்றது போலவே தமிழ்நாட்டிலும் குளறுபடிகள் நடந்துள்ளன.
முழுமையாக விவரங்கள் வெளியே வந்த பிறகே அதன் அதிர்வலைகள் தெரியவரும். எஸ்ஐஆர் தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு எனக்கூறினார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அந்த கூட்டணியில் எத்தனை தொகுதி கேட்பது உள்ளிட்டவை குறித்தும், தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தலைமை நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் எனக் கூறினார்.
விஜய்யின் ஈரோடு பரப்புரை பேச்சு குறித்து பேசிய அவர்,
திமுக தீய சக்தி, த.வெ.க தூய சக்தி என விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல,
அது துடுக்கு மொழி. திமுகவை தாக்கி பேசும் அளவுக்கு, பாஜக மீது அவர் எந்த விமர்சனமும் வைக்கவில்லை? அவர் ஏன் பாஜகவை பார்த்து அச்சப்படுகிறார் என தெரியவில்லை.
நடிகர் விஜய் முதலில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN