Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 20 டிசம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, உயிரிழந்த கணேசன் விலை உயர்ந்த இன்சூரன்ஸ் கட்டி வந்ததாக தெரிகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கணேசனின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது, குடும்பத்தினர் அனைவரும் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருப்பது தெரியவந்தது.
இந்த இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுதற்காகவே, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மற்றும் நண்பர்கள் பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28), தினகரன் (28) ஆகியோருடன் இணைந்து, தந்தையை தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த கொலையானது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டுமென அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, பாம்பு பிடிக்கும் நபர்களிடம் இருந்து கொடி விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை வாங்கி வந்துள்ளனர். அதோடு, அதனை தூங்கி கொண்டிருந்த கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு, கருணை அடிப்பைடியில் தந்தையின் அரசு வேலையை பெறவும், ரூ.3 கோடி மதிப்புள்ள அவரது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவுமே நண்பர்களுடன் சேர்ந்த இந்த சதித்திட்டத்தை திட்டியதை மகன்மகள் ஒப்புக்கொண்டனர்.
இதைதொடர்ந்து, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தந்தையின் வேலை மற்றும் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை கடிக்க வைத்து மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN