3 -வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்!
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, நேற்று முன்தினம் (18-12-25) சென்னை சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம
3வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, நேற்று முன்தினம் (18-12-25) சென்னை சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை தொடங்கிய இப்போராட்டம், மாலை 6 மணிக்கு மேலாக நீடித்தது.

அதனை தொடர்ந்து காவல்துறையினர், போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்து பேருந்துகள் மூலமாக அவர்களை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

ஆனால், செவிலியர்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அவர்களை மீண்டும் கைது அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒப்பந்த செவிலியர்கள் இன்று

(20-12-25) மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலை, சம ஊதிய, கேட்டு போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் கைது செய்திருந்த நிலையில், இரவோடு இரவாக பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்து நேற்று இரவு முதலே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்து டிச. 22 தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககத்துக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியிருக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b