Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின. டிசம்பர் 14 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிக்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் நேற்று (டிசம்பர் 19) மாலை தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 26,94,672 பேர் இறந்தவர்கள் என நீக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் என 66,44,881 நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரட்டை வாக்குப்பதிவு 3,39,278 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாக உள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, இனி அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும்
(டிசம்பர் 20,21) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b