Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலானது மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் இந்த ரெயில், விருத்தாசலத்தில் நிற்காமல் சென்றுவந்தது. இதனிடையே பயணிகள் பலரும் இந்த ரெயில் விருத்தாசலத்தில் நின்றுசெல்லவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரெயில், விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரெயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை மந்திரி எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில், விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b