Enter your Email Address to subscribe to our newsletters

கூடலூர், 21 டிசம்பர் (ஹி.ச.)
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகள், விழா பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர் மாவட்டம் வடலூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும்.
இதில் பார்வதிபுரம்,காட்டுக் கொல்லை, ஆபத்தானரணபுரம், தென்குத்து, மருவாய், கருங்குழி, கொளக்குடி, கல்குணம்,பெத்தநாயக்கன் குப்பம்,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் விதமாக பிரமாண்டமான குடில் ஆண்டு தோறும் அமைக்கப்படுவது வழக்கம்.
மேலும் இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலய வளாகத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணியும், பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில், ஆலயம் முழுவதும் மின்விளக்குகள் உள்ளிட்ட அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இயேசு கிறிஸ்து பிறப்பு நாடகங்கள் வாயிலாகவும், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற்று வருகிறது.
மேலும் டிசம்பர் 24-ஆம் தேதி இரவு இந்த ஆலய வளாகத்தில் திருப்பலி, மறையுரை, கூட்டுத் திருப்பலி நடைபெறும். தொடா்ந்து, நள்ளிரவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்கு காண்பிக்கப்பட்டு, பக்தா்களின் பாா்வைக்காக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள குடிலில் வைக்கப்படும்.
இந்த ஆலய பங்கை சோ்ந்த பங்கு பேரவை,இளைஞர்கள்,பெண்கள் பணிக்குழு,மரியாயின் சேனை, வின்சென்ட் - தே- பால் சபை,பீடச்சிறுவர்கள், அருட் சகோதரிகள்,தன்னார்வ தொண்டர்கள் என அனைவரும் ஆர்வமாக கடந்த 15 நாள்களாக இங்கு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பால்ராஜ், உதவி பங்கு தந்தை அஜய்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b