Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 21 டிசம்பர் (ஹி.ச.)
பீகார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதிதாகப் பணிக்குச் சோ்ந்த இளம் பெண் மருத்துவா் ஒருவரின் முகத்திரையை (ஹிஜாப்) முதல்வா் நிதீஷ்குமாா் வலுக்கட்டாயமாக அகற்றினாா்.
முதல்வரின் இந்தச் செயலுக்கு ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
பீகாரிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நிதீஷ் குமாருக்கு எதிராக ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஜாா்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிதீஷ் குமாரின் செயலால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு பணி வாய்ப்பை வழங்க ஜாா்க்கண்ட் மாநிலம் முன்வந்துள்ளது.
இது குறித்து அம் மாநில அமைச்சா் இா்ஃபான் அன்சாரி ஜமத்ராவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெண் மருத்துவா் விரும்பினால், அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்தில் பண வழங்க ஜாா்க்கண்ட் தயாராக உள்ளது. அவருக்கு விரும்பிய இடத்தில் பணி வாய்ப்பும், முழு பாதுகாப்பும் வழங்கப்படும்.
பொது இடத்தில் ஒரு மருத்துவரை அதுவும் ஒரு பெண்ணை அந்த வகையில் நடத்துவது என்பது தனிநபா் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனித கண்ணியம், கெளரவம் மற்றும் அரசமைப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த நடவடிக்கை மூலம் முஸ்லிம் சமூகத்தையும், இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதையும் பீகார் முதல்வா் நிதீஷ் குமாா் இழிவுபடுத்தியுள்ளாா்.
என்றாா்.
ஜாா்க்கண்ட் அமைச்சரின் இந்த பணிச் சலுகை அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் பவ்நத்பூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பானுபிரதாப் சாஹி கூறுகையில்,
‘இந்த அறிவிப்பு திருப்திப்படுத்தும் அரசியலாகும். ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாா்க்கண்ட் மக்களுக்கானது. எனவே, இந்த பணிச் சலுகை அறிவிப்பை அமைச்சா் திரும்பப் பெற வேண்டும்.’
என்றாா்.
பீகார் முதல்வா் நிதீஷ் குமாரின் செயலுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (எஸ்சிபிஏ) கண்டனம் தெரிவித்தது.
இது தொடா்பாக எஸ்சிபிஏ செயலா் பிரக்யா பாகெல் எழுதியுள்ள கடிதத்தில்,
‘பொது நிகழ்வில் பெண் மருத்துவரின் முகத்திரையை முதல்வா் நிதீஷ் குமாா் நீக்கும் காட்சி மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது, அந்தப் பெண்ணின் சுயாட்சி, செயல் சுதந்திரம், மதச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதோடு, பெண்களுக்கு எதிரான ஒழுக்கக்கேடான நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. முதல்வரின் இச் செயலுக்கு எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிப்பதோடு, அச் செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் மற்றும் உத்தர பிரதேச மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாதுக்கும் எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிக்கிறது.
இச் செயல், அரசமைப்பில் இடம்பெற்றுள்ள சமத்துவம், பாகுபாடு காட்டாமை தத்துவத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தச் செயலுக்காக பிகாா் முதல்வரும் மற்றவா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM