Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 21 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவில் வெப்பநிலை குறைந்து கடும்குளிர் நிலவி வருகிறது. இரவு முதல் அதிகாலை வரை குறைந்தபட்சம் 5 டிகிரி முதல் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பகலில் அதிகபட்சமாக 12 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் நிலவுகிறது.
தினமும் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் கொடைக்கானல் காஷ்மீர் போல காட்சியளிக்கிறது. இதனால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனியின் தாக்கத்தால் பயிர்களும் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, 2026-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கவுள்ள 63-வது மலர்க் கண்காட்சிக்காக, தோட்டக்கலைத் துறை மூலம் முதல்கட்டமாக டிச.12-ல் சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட ஒரு லட்சம் மலர்ச் செடிகள் நடவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், உறை பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நடவு செய்த மலர்ச் செடிகளைப் பாதுகாக்க தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் பிளாஸ்டிக் மற்றும் துணியால் ஆன நிழல் வலைகளைப் போர்த்திப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பூங்கா முழுவதும் வெள்ளை மற்றும் பச்சைக் கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்துள்ள செடிகள் பாதிக்காமல் இருக்க, மாலையில் நிழல் வலைகளால் செடிகளை மூடி பாதுகாக்கிறோம். மறுநாள் காலையில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் வரத் தொடங்கியதும் நிழல் வலையை அகற்றிவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b