Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 21 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் இன்று காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பெண் தேர்வர் ஒருவர் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக ஒரு மையத்திற்கு வந்துள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அது ஆண்களுக்காக ஒதுக்கப்பட்ட மையம் என்பதும், தனது தேர்வு மையம் வேறொரு இடத்தில் இருப்பதும் அவருக்குத் தெரியவந்தது.
தேர்வு தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்ததால், அந்தப் பெண் தேர்வர் செய்வதறியாது கண்ணீர் மல்க திகைத்து நின்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர் (Traffic SI), அந்தப் பெண்ணின் பதற்றத்தைக் கண்டு நிலைமையை விசாரித்தார். நேரம் மிகக்குறைவாக இருந்ததை உணர்ந்த அந்த அதிகாரி, உடனடியாக அப்பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு இடையே விரைந்து சென்று உரிய தேர்வு மையத்தில் கொண்டு போய் சேர்த்தார்.
சரியான நேரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் செய்த இந்த மனிதாபிமான உதவியால், அந்தப் பெண் தேர்வர் நிம்மதியுடன் தனது தேர்வை எழுத சென்றார்.
இதனை நேரில் பார்த்த பொதுமக்களும் பிற தேர்வர்களும், அந்த அதிகாரியின் உடனடிச் செயலையும் மனிதநேயத்தையும் பாராட்டி வருகின்றனர்.
சீருடைப் பணியில் சேரத் துடிக்கும் ஒருவருக்கு, சீருடைப் பணியாளரே உதவியது என சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN