Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியானது.
அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த வாக்குகளில் 35.58% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக சென்னையில் 40.04 லட்சம் வாக்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று(20.12.2025) முதல் நாள் முகாம் நடந்த நிலையில் ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று(21.12.2025) இரண்டாவது நாளாக சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக பெயர் சேர்ப்புக்கு படிவம் 6-ஐயும் பெயர் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்ற படிவம் 7-ஐயும் முகவரி மற்றும் பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது வாக்காளர் உதவி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b