Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று
(டிசம்பர் 21) இரவு நடைபெற உள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை, சரவணப் பொய்கை, தென்பரங்குன்றத்தில் உள்ள மலை பாதை மற்றும் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நெல்லி தோப்பு ,தர்கா மற்றும் சர்ச்சைக்குரிய தீபத்தூண் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காகவும் 120 போலீஸார் பணியில் உள்ளனர்.
இன்று பள்ளிவாசல் சார்பாக மலை மேல் உள்ள தர்கா அருகே உள்ள கள்ளத்தி மரத்தில் ‘ சந்தனக்கூடு கொடிமரம் ஏற்றுவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என கருதி மேலும் இரண்டு பட்டாலியன் 80 போலிஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் திருவிழாவை நடத்த வேண்டும். புதிய நடைமுறைகளை ஏற்படுத்தவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தலோக் கூடாது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், தர்கா நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் தர்கா நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b