Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 21 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்,
அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாகவும், வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் நுழைவாயில் வழியாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசங்கள் அறிவிக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது, வழக்கமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு அருணாச்சலேஸ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN