Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.
இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில், கால அவகாசம் டிசம்பர் 11-ந்தேதி வரை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் (19-ந்தேதி) வெளியிடப்பட்டது.
இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த பணியை தி.மு.க. ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தது.
இதனாலேயே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Hindusthan Samachar / JANAKI RAM