ஆதார் மோசடிகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.) இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் வங்கிப் பரிவர்த்தனை முதல் மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஆனால், உங்கள் ஆதார் விவரங்களை கவனக்குறைவாக கையாண்டால், உங்கள் வங
ஆதார் மோசடிகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் வங்கிப் பரிவர்த்தனை முதல் மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.

ஆனால், உங்கள் ஆதார் விவரங்களை கவனக்குறைவாக கையாண்டால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் ஆன்லைன் திருடர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஆதாரை வைத்து நடக்கும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் மோசடிகளில் இருந்து உங்களை எப்படி தற்காத்துக் கொள்வது?

இந்தியாவில் ஆதார் எண் என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, அது உங்கள் கைரேகை மற்றும் கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் ஆதார் மூலமான பணப் பரிமாற்ற வசதி உள்ளதால், உங்கள் ஆதார் எண் மற்றும் கைரேகை விவரங்கள் திருடப்பட்டால், உங்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.

மக்கள் செய்யும் 'அந்த' சின்ன தவறு என்ன?

பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு, தங்களின் ஆதார் கார்டு நகலையோ அல்லது அதன் புகைப்படத்தையோ பேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் பகிர்வதுதான்.

மேலும், பாதுகாப்பற்ற இடங்களில் ஆதார் ஜெராக்ஸ் எடுக்கும்போது கவனமாக இருப்பதில்லை. இங்கிருந்துதான் மோசடி நபர்கள் உங்கள் விவரங்களைச் சேகரிக்கிறார்கள்.

தப்பிப்பது எப்படி?

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சில பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது:

1. பயோமெட்ரிக் லாக்கிங் (Biometric Lock):

உங்கள் கைரேகை விவரங்களை யாராவது தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதை ஆன்லைனில் லாக் செய்யலாம்.

இதனை செய்ய, uidai.gov.in என்ற UIDAI இணையதளத்திற்குச் செல்லவும். அங்கே, ‘My Aadhaar’ பிரிவில் 'Lock/Unlock Biometrics' என்பதைத் தேர்வு செய்யவும்.

உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் OTP உள்ளிட்டு இந்த வசதியைச் செயல்படுத்தலாம். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே இதை அன்லாக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar):

எல்லா இடங்களிலும் முழு ஆதார் கார்டையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 'மாஸ்க்டு ஆதார்' முறையில் முதல் 8 எண்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 எண்கள் மட்டுமே தெரியும். இது மிகவும் பாதுகாப்பானது.

3. OTP பாதுகாப்பு:

யாராவது போன் செய்து வங்கி அதிகாரி என்று கூறினால், உங்கள் ஆதார் எண்ணையோ அல்லது மொபைலுக்கு வரும் OTP-யையோ ஒருபோதும் சொல்லாதீர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் ஆதார் தரவுகளான பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து வைப்பதன் மூலம் சைபர் திருடர்களிடம் இருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்பை பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM