Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
வாக்குரிமையை பறிக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ததை தள்ளி வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எதிர்கட்சிகளின் கோரிக்கைகளைப் பற்றி ஆரம்பத்தில் காது கொடுக்காத தேர்தல் ஆணையம் பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட கொடுக்கப்பட்ட அவகாசத்தை தன்னிச்சையாக 10 நாட்கள் நீட்டித்தது.
இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு சுமார் 1 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். 10 நாட்கள் இடைவெளியில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் இடமாறுதல்களை முழுமையாக செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த காரணங்களால் தான் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போதும் உயிரோடு இருப்பவர்கள் சிலரது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதும், அவர்கள் இறந்து விட்டதாக காரணம் சொல்லியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களில் 68 சதவிகிதம் பேர் அதாவது, 66 லட்சம் பேர் முகவரி அற்றவர்கள் அல்லது காண முடியாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. மாறாக, இதில் ஒரு கணிசமான பகுதியினர் கால அவகாசமின்மையால் உரிய முறையில் கவனம் செலுத்தாததால் விடுபட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு.
அதேபோல, 27 லட்சம் பேர் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த வாக்காளர்களில் 99 சதவிகிதம் பேருக்கு படிவம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் 99 சதவிகிதம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இறந்தவர் எண்ணிக்கை முரண்பாடாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சராசரியாக அதிகபட்சமாக இறப்பு விகிதம் 1000க்கு 10 என்கிற அளவிலேயே உள்ளது. பிறக்கும் குழந்தை முதல் 18 வயது நிறைவடையும் வரை உள்ளவர்களும் இதில் அடக்கம். இவர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட இந்த அளவிற்கு இறந்தவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. 1000க்கு 10 என்பதை கணக்கில் கொண்டால் எஸ்.ஐ.ஆர். தொடங்கும் போது இருந்த 6.41 கோடி வாக்காளர்களில் ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கை 7.69 லட்சம் பேர். இப்போது சொல்லப்பட்டிருக்கும் 27 லட்சம் பேர் என்பது மூன்றரை ஆண்டுகளில் இறந்தவர்களின் யாருடைய பெயரும் நீக்கப்படவில்லை என்பதாக பொருள் கொள்ளப்படும்.
குழந்தைகள், சிறார்கள், 18 வயதிற்கு குறைவுடையோர் ஆகியோரில் இறந்தோரை நீக்கி விட்டுப் பார்த்தால் இது இன்னும் சில ஆண்டுகள் சேர்ந்து வரும்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல், 2021ல் சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களுக்கு முன்பாக இதேபோன்று சுருக்கமுறை திருத்தங்கள் செய்யப்பட்டதை நாம் அறிவோம். அப்போதெல்லாம் இறந்தவர்கள் நீக்கப்படவே இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் உரிய முறையில் பதிலளிக்கவில்லை.
பொதுவாக, இந்தியாவில் மக்கள் தொகையை மதிப்பீடு செய்ய உத்தேசமான சில வழிமுறைகளை இந்திய அரசே வைத்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 7.74 கோடி மக்கள் தொகை இருக்கலாம் என்றும், அதில் 6.26 கோடி பேர் 18 வயது பூர்த்தியானவர்கள் என்றும் உத்தேசமாக கணக்கிடப்படுகிறது.
எனில், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு இருக்க வேண்டும். 2015 கணக்குப்படி சுமார் 20 லட்சம் பேர் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறியவர்களாகவும், வேறு நாடுகளில் பணிபுரிபவர்களாகவும் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம் என்கிற போதும் அதை அப்படியே எடுத்துக் கொண்டாலும் இப்போதைய நிலையில் 30 லட்சம் பேர் புலம்பெயர்ந்து விட்டதாக கொண்டு அவர்களுடைய பெயர்கள் எல்லாம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதாக எடுத்துக் கொண்டால் கூட சுமார் 6 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், 57 லட்சம் பேர் குறைவு ஏன் என்பதை தர்க்க ரீதியாகவும், விபரங்களின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் விளக்கியிருக்க வேண்டும். அதையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை.
இதேபோன்று, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக சேர்பவர்கள் இனி உறுதிமொழி படிவம் கொடுத்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்பது முற்றிலும் தவறான நடைமுறையாகும். குறிப்பிட்ட காலத்தில் படிவம் கொடுக்க வாய்ப்பில்லை என்பதாலோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முறையாக செயல்படாததால் நீக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் புதிதாக ஆவணங்கள் கொடுக்க வேண்டும், உறுதிமொழி படிவம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கடுமையான தண்டணையாகும். மீண்டும் வாக்காளர் திருத்தத்திற்கு பதிலாக வாக்காளர் நீக்கத்திற்கான வழிமுறைகளாகவே தெரிகின்றன. இதேபோன்று, உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று அறிவித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தற்போதைய எஸ்.ஐ.ஆர். நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தையும், இவ்வளவு முக்கியமான பிரச்சனையில் கால தாமதம் செய்வதை விடுத்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ