Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 22 டிசம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி., பூங்கா அருகில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பண்டைய கால கல்வெட்டுக்கள், சிலைகள், முதுமக்கள் தாழி, பட்டயங்கள் என பல்வேறு பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநில மக்களும் அருங்காட்சியகத்திற்கு வந்து, வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர். இதேபோல் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று துறை மாணவர்களுக்கு, இங்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தை ஈரோடு மாவட்டத்தின், 18வது சுற்றுலா தலமாக அறிவிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில் கொடிவேரி, பவானிசாகர் அணை, ஈ.வெ.ரா., நினைவகம் உள்பட, 17 இடங்கள் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தையும் சுற்றுலா தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் சுற்றுலா துறைக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் கூறுகையில்,
அரசு அருங்காட்சியகத்தை சுற்றுத்தலமாக மாற்றும் நடவடிக்கைக்காக, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விரைவில் மாவட்டத்தின், 18வது சுற்றுலா தலமாக அரசு அருங்காட்சியகம் அறிவிக்க வாய்ப்புள்ளது, என்றார்.
Hindusthan Samachar / vidya.b