Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (டிசம்பர் 22) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியிருப்பதாவது,
இந்தியா - நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இது ஒரு முக்கிய தருணம். இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, எனது நண்பர் (நியூசிலாந்து) பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் நானும் சிறிது நேரத்துக்கு முன்பு மிகச் சிறந்த உரையாடலை மேற்கொண்டோம்.
இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி ஒன்பது மாதங்களில் முடிவடைந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவான அரசியல் விருப்பம் இதில் பிரதிபலிக்கிறது.
மேம்பட்ட சந்தை அணுகல், ஆழமான தொடர் முதலீடுகள் ஆகியவற்றை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இதனால், புதுமைகளைப் படைப்பவர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும்.
இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டப் போகிறது. வரும் ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரட்டிப்பாக்கப் போகிறது. 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வரப் போகின்றன.
நமது திறமையான இளைஞர்கள், ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், சீர்திருத்தம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கு இது வலுவான அடித்தளத்தை அமைக்கப் போகிறது.
அதேநேரத்தில், விளையாட்டு, கல்வி, கலாச்சார தொடர்புகள் போன்ற பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.
என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b