Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 22 டிசம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மகாயுதி கூட்டணி 207 தலைவர் பதவிகளை வென்று பெரும் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 நகராட்சி கவுன்சில்களுக்கும், நகர பஞ்சாயத்துக்களுக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், அதன் முழுமையான முடிவுகள் இன்று வெளியாகின.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடியாக மோதின.
மகாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான என்சிபி ஆகிய கட்சிகள் இருந்தன.
மொத்தம் 288 நகராட்சி கவுன்சில்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் நடைபெற்ற தேர்தலில், மகாயுதி கூட்டணி 207 தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.
இதற்கு மாறாக, எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, பாஜக தனிப்பெரும் கட்சியாக 117 தலைவர் பதவிகளை வென்றுள்ளது.
இதனிடையே, இந்த தேர்தல் வெற்றிக்காக மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் உதவியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam