Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.)
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார்.
முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர்.
மெஸ்சியின் வருகையையொட்டி சால்ட்லேக் ஸ்டேடியத்தில் டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கோபமடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தரப்பில் மைதானத்தை சுற்றி மெஸ்ஸி வலம் வருவார் என்று சொல்லப்பட்ட சூழலில், அவர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறினார்
இதனால் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாட தொடங்கினர். மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து மெஸ்ஸியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், மெஸ்ஸி வருகையையொட்டி ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா மேற்கு வங்காள போலீசாரிடம் கூறியுள்ளார்.
’கோட் இந்தியா டூர் 2025’ சுற்றுப்பயணத்திற்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி, மத்திய அரசுக்கு ரூ.11 கோடி வரி என மொத்தம் ரூ.100 கோடி செலவாகியுள்ளது. செலவான மொத்த தொகையில் 30% ஸ்பான்சர்களிடமிருந்தும், 30% டிக்கெட் விற்பனை மூலம் பெறப்பட்டதாகவும் சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது பயணம் தடங்கலின்றி தொடர்ந்தது.
பின்னர் ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM