Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று
(டிசம்பர் 21) 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று
(டிசம்பர் 22) மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
செவிலியர்கள் போராட்டத்தில் உள்ள நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்கள்.
நிரந்தரப் பணியாளர்களைப் போலவே அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரியுள்ளார்கள். இது சம்பந்தமாக அரசு பரிசீலித்து வருகிறது. அதன் மீதும் விரைவில் முடிவெடுக்கும்.
இதுவரை இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆண்டுதோறும் காலிப்பணியடங்கள் தாண்டி 1300 செவிலியர்கள் முதல்வர் திறந்துவைத்த அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
மேலும் 7400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர். இவர்களுக்காக 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பொங்கலுக்கு முன்னர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மற்றவை காலிப்பணியிடங்கள் உருவாகும் பட்சத்தில் படிப்படியாக நிரப்பப்படும். மேலும் அந்த காலிப்பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b