Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்ற நிலையில், அரசுக்கு எதிராக செவிலியர்கள் கோஷங்களை எழுப்பியதால், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
நேற்று (டிசம்பர் 21) 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பனியால் செவிலியர்களில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்ட குழுவினர் இன்று (டிசம்பர் 22) கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b