Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச.)
கிருஸ்துமஸ் விழா என்ற பெயரில் 'மத வாத' மாநாட்டில் கலந்து கொண்டு மதவாத அரசியலை சிறிதளவும் கூச்சமின்றி முன்னெடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அந்த விழாவில் கிருஸ்துவ பாதிரியார்கள் வெளிப்படையாக திமுக விற்கு வாக்களிக்குமாறு பேசியுள்ளது மதவாதத்தின் உச்சக்கட்டம். அரசியலில் மதத்தை கலந்து விஷத்தை விதைப்பவர்கள் 'மதசார்பற்றவர்களாக' தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது. சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்போம் என்று கூக்குரலிட்டவர்கள், கிருஸ்துவ மதமும் , திராவிட கொள்கையும் ஒன்று என்று ஓட்டுக்காக ஒரு மதத்தை மண்டியிடுவது மலிவு அரசியலுக்கு எடுத்துக்காட்டு.
கிருஸ்துவ, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்பவர்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லையே என பலர் வருத்தப்படுவதுண்டு, ஆனால், இப்படிப்பட்ட மதவாதிகள், சகிப்புத்தன்மை மிக்க ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
தங்களை 'நாத்திகர்களாக' காட்டிக்கொள்ளும் மதவாத அரசியல்வாதிகள், மதரீதியாக வாக்களிப்பவர்களின் ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக, பணத்திற்காக, ஹிந்து கடவுள்களை தூற்றுவதும், நம்பிக்கைகளை அவமதிப்பதும், கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களை போற்றுவதும் அவர்களின் போலி மதச்சார்பின்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. கொத்து கொத்தாக மத ரீதியாக சிறுபான்மையினர் வாக்களிப்பதால், பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை அவதூறு செய்தால் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை அள்ளி விடலாம் என்று மக்களை முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு மலிவு அரசியலில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதற்கு காரணமே ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையும் தான். ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்துத் தான் 'முப்பது கோடி முகமுடையாள்' என்றார் மகாகவி பாரதியார். அதே பாரதியார் தான் பாரதத் தாயை,
நாவினில் வேதமுடையாள் கையில் நலந்திகழ் வாளுடையாள் - தனை மேலினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடையாள்
என்பதை போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் உணர வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ