Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 22 டிசம்பர் (ஹி.ச.)
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மூக்கன் (வயது 52). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் தங்க கணபதி (50). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் ஏற்கனவே ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போது போதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மூக்கன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்க கணபதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தங்க கணபதி வெட்டப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரரான முத்துகுமரன் (46), உடனடியாக மூக்கனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, எனது சகோதரர் தங்க கணபதி சமீபத்தில் தான் ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.
திருந்தி வாழ நினைத்த அவரை இப்படி செய்து விட்டாயே என்று கூறி மூக்கனை அரிவாளால் முத்துகுமரன் வெட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து முத்துகுமரனை கைது செய்தனர்.
இதனிடையே அரிவாள் வெட்டில் உயிருக்கு போராடிய தங்க கணபதி, மூக்கன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மூக்கன் இறந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை தச்சநல்லூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN