வாக்குறுதியை நிறைவேற்ற திராணியில்லாமல், அம்மா மீது குற்றம் சுமத்துவது கேலிக்கூத்தானது - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச) அரசு செவிலியர் பணி நிரந்தரப் பிரச்சனையில் அம்மா மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொ
Ops


Let


Tw


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச)

அரசு செவிலியர் பணி நிரந்தரப் பிரச்சனையில் அம்மா மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டு மக்கள் நோயில்லா வாழ்வைப் பெற வேண்டுமென்றால் நோய்களை நீக்குவதற்கான மருத்துவ வசதிகள் அனைத்துப் பகுதிகளிலும் உருவாக்கப்படுவதோடு, மருத்துவர், செவிலியர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த புதுப் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம் என்ற அமைப்பினை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள். இதன்மூலம் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டன.

இவ்வாறு மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் தற்போது தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசுக்கு உண்டு. ஏனென்று சொன்னால், இதே செவிலியர்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய போது, “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.

இது தொடர்பான வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. இவற்றையெல்லாம் மறந்து, இல்லை மறைத்து, மாண்புமிகு அம்மா அவர்கள் மண்ணுலகைவிட்டு பிரிந்து சென்று ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் என்ற நடைமுறை அம்மா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும், தற்போதைய செவிலியர்கள் பணி நிரந்தரப் பிரச்சனைக்கு மாண்புமிகு அம்மா அவர்கள்தான் காரணம் என்ற ரீதியிலும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

அமைச்சர் அவர்களின் இந்தக் கூற்று பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை பத்து காசு என்ற பழமொழி போல் அமைந்துள்ளது.

பணியாளர்களாக அம்மா இன்று உயிரோடு இருந்திருந்தால், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்கள் எல்லாம் நிரந்தரப் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். போராட்டம் என்பதே வந்திருக்காது. துரதிர்ஷ்டவசமாக அம்மா அவர்கள் இன்று நம்மோடு இல்லை.

வாக்குறுதியை நிறைவேற்ற திராணியில்லாமல், அம்மா அவர்கள்மீது குற்றம் சுமத்துவது கேலிக்கூத்தானது. வாக்குறுதி அளிக்கும்போது காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் தி.மு.க.வுக்கு தெரியாதா? தெரிந்துதானே வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படியென்றால், தி.மு.க.வால் அளிக்கப்பட்ட வாக்குறுதி செவிலியர்களை ஏமாற்றுவதற்காகவா என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

வாக்களித்த மக்களை வஞ்சித்துவிட்டு அதற்கு ஒரு சப்பைக்கட்டு கட்டுவது வெட்கக்கேடானது. பிறர் மீது அனாவசியமாக பழிபோடுவதை நிறுத்திக் கொண்டு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ