Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 டிசம்பர் (ஹி.ச.)
வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி, அவர் கொடூரமாக தாக்கி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.
உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, டில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது;
வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது. ஆனால், வங்கதேசத்திற்கும், அந்நாட்டுக்கும் பல வழிகளில் பங்களிப்பை வழங்கியதன் அடிப்படையில், தூதரக செல்வாக்கை பயன்படுத்தலாம். சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க யூனுஸ் தலைமையிலான அரசுக்கு வலியுறுத்தலாம்.
வங்கதேசத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக பாடுபடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசுக்கு பார்லிமென்ட் நிலைக்குழு சார்பில் அண்மையில் பாராட்டு தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM