திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரன் குடும்பத்துக்கு பொன் மாணிக்கவேல் ஆறுதல்
மதுரை, 22 டிசம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதி
Pon Manickavel


மதுரை, 22 டிசம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும் திமுக அரசை கண்டித்தும் டிசம்பர் 18ம் தேதி மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நரிமேட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆறுதல் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:

பூர்ணசந்திரனை தற்கொலைக்கு தூண்டியதில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு. தன் குடும்பமே திமுகவை சேர்ந்தவர்கள் என இறப்பதற்கு முன் பூர்ணசந்திரனே தெரிவித்துள்ளார்.

பொதுநலத்திற்காக திமுகவைச் சேர்ந்தவர்கள் யார் இறந்தாலும் அவர்கள் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பூர்ணசந்திரன் இறப்பை கொச்சைப்படுத்தி, களங்கம் ஏற்படுத்துபவர்கள் கீழ்த்தரமான பிறவிகள். அவர் திமுகவை சேர்ந்தவரானாலும் சிறந்த ஆன்மிகவாதி என்றார். நான் எந்த கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன்.

அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / ANANDHAN