Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 டிசம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பாக பல்வேறு சர்ச்சையில் எழுந்து வந்த நிலையில் காவல்துறை சார்பில் மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி நடந்த திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்குப்பின் 21-ஆம் தேதி நடைபெறும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தன கூடு கொடியேற்ற விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
தங்களுக்கு கடந்த 19 நாட்களாக மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் செல்ல அனுமதி மறுத்த நிலையில் தற்போது அவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கினர் என காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர் .
இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பொதுமக்கள் தரிசனத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் முகவரி பதிவு செய்து பின் மலைக்குச் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையிலும் போலீசார் தடுப்பு வேலிகளை வைத்திருந்தனர் .
Hindusthan Samachar / Durai.J