Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்திப்பது குறித்த அக்கட்சியின் மைய நிர்வாக குழுக் கூட்டம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.
2026ல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மைய குழுக் கூட்டம், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் புதிய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது, பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தேமுதிக மற்றும் பாமக இதுவரையில் கூட்டணி குறித்து முடிவு செய்யாத நிலையில், அந்த இரண்டு கட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஏற்கெனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், இணைப் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் எச்.ராஜா, தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ். ஆர் சேகர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் விஜய தாரணி, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தலைமையிலான பாஜக குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எம். ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்
கொண்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN