Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச)
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழுக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர் -ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் நேற்று (டிசம்பர் 22) தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக பேசிய போட்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரான த.அமிர்தகுமார் கூறியதாவது,
கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், நிதி பிரச்சினை என ஏற்கெனவே கூறியதையே மீண்டும் சொல்கின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தர மறுப்பது எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின்போதும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைத்து காலதாமதம் செய்வதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதன்படி, வருகிற 29-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஒருவேளை அரசு ஜனவரி 6-ம் தேதிக்கு முன்பாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தால் காலவரையற்ற போராட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்றார்.
அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக பேசிய ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு..பாஸ்கரன் கூறுகையில்,
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையை கருத்து கேட்பு கூட்டமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. பேச்சுவார்த்தை ஒரு விளையாட்டு போல் அமைந்திருந்தது.
கடந்த 4 பேச்சுவார்த்தைகளின்போது கூறியதையே அமைச்சர்கள் மீண்டும் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த காலங்களில் தீபாவளி அன்று சிறைகளில் இருந்த வரலாறு தமிழக அரசு ஊழியர்களுக்கு உண்டு. காலவரையற்ற போராட்டம் தொடர்பாக டிசம்பர் 27-ம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடத்தப்படும் என்றார்.
Hindusthan Samachar / vidya.b