Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை செங்குன்றம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று தையல் இயந்திரம்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர்
கோவி செழியன் மாநில உரிமையை, மாநில சுயாட்சியை நிலைநிறுத்த 2026 தேர்தலில்
திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்றார்.
மோடி, அமித்ஷா, இந்துத்துவா ஆகிய
சக்திகள் அனைத்தும் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தாலும், திமுக சிம்ம சொப்பனமாக
விளங்கி வருகிறது என்றார்.
கொசு, டெங்கு போல ஒழிக்க வேண்டிய நோய் சனாதனம் என
உதயநிதி கூறியதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பிய அமைச்சர், உதயநிதி
தலையை வெட்டி வந்தால் 10 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்கள் என அவரிடம் கேட்ட
போது அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் 400
இடங்களில் வெற்றி பெறும் என அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் ஒற்றை
செங்கல்லில் பிரச்சாரம் செய்ததால் 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது என்றும்,
டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு நீ கூஜா தான் என்றார்.
பாஜகவால் திமுகவை எதிர்க்க ஆள் இல்லாததால், அடிமைகளை தேடுகிறார்கள் என்றார்.
பெரியார் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வேண்டும் என அறிவித்தார்
எனவும், 1989இல் கலைஞர் அதனை சட்டமாக கொண்டு வந்து பெண்களுக்கு சொத்தில் சம
உரிமை வழங்கினார் எனவும், அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த
போது, ஆர் எஸ் எஸ் தோற்கடித்த நிலையில், அதனை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது
திமுக தான் என பெருமிதம் தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்தை, 150 நாளாக
அதிகரித்து 400 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும்
நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி
காந்தியை சவக்குழியில் புதைக்கிறார்கள் என்றும், 100 நாள் வேலைக்கு முடிவு
கட்டும் மோடிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
அதிமுக 10 ஆண்டு
கால ஆட்சிகாலத்தில் பயன் ஏதும் இல்லை என்றும், மாநில உரிமைகளை பறி கொடுத்தனர்
எனவும், அதிமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றியுள்ளீர்களே, இது அண்ணாவிற்கு
செய்யும் துரோகம் இல்லையா என வினவிய அமைச்சர் செழியன், பாஜக கொண்டு வந்த
திட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து இருக்கிறாரா என்றும், கட்சியில் அண்ணா
பெயர் எதற்கு, அமித்ஷா படத்தை போட்டு கொண்டு பகிரங்கமாக பிரகடனப்படுத்த
வேண்டியது தானே என்றார்.
மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் 1கோடியே 30லட்சம்
மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும், 1000ரூபாய் எதற்கு கொடுக்கிறீர்கள்
என கேட்கும் பாஜக, அதிமுக ஆள வேண்டுமா அல்லது மகளிர் நலன் கருதி திட்டத்தை
கொண்டு வந்த திமுக ஆள வேண்டுமா என மகளிர் அனைவரும் எண்ணிப்பார்த்திட வேண்டும்
எனவும் அமைச்சர் செழியன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
அமைச்சர் கோவி செழியனிடம்,
உழைக்கும் கட்சி பாஜகவிடம் தவெக கூட்டணிக்கு வர
வேண்டும் என தமிழசை கூறியது குறித்த கேள்விக்கு,
பாஜகவிற்கு யார் யாரை
சேர்த்துக் கொள்வது என தெரியாமல் ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்,
தவெக உட்பட பல்வேறு கட்சிகள் இருந்தாலும் திமுக தான் தனக்கு எதிரி எனக்கூறி
தன்னை 2வது இடத்தில் நிலை நிறுத்த முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.
2, 3, 4
ஆம் இடங்களுக்கு மட்டுமே போட்டி என்றும், திமுக தான் முதலிடம் என அனைத்து
கட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam