Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
பணி நிரந்தரம் கேட்கும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள் முதல்வர் அவர்களே என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
கடந்த 18ம் தேதியிலிருந்து 8,000-த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டி இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “தற்போது பணியிடங்கள் எதுவும் காலி இல்லை. கலைந்து செல்லச் சொல்லுங்கள்” என்று மிரட்டியிருந்த நிலையில் தற்போது அவர்களில் 724 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றுரைத்துள்ளார்.
எட்டாயிரம் பேருக்கு மேல் பணி நிரந்தரத்திற்காகத் தவமிருக்கும் நிலையில் அவர்களில் 724 செவிலியர்களுக்கு மட்டும் எதன் அடிப்படையில் கூறுகிறது, திமுக அரசு? இது பிரித்தாளும் சூழ்ச்சியா அல்லது ‘பிரச்சினைக்கு நாங்களும் ஏதோ செய்துவிட்டோம்’ எனும் கண்துடைப்பு நாடகமா?
வாக்குறுதி என் 356-ல் கூறியது படி, பணி நிரந்தரம் கேட்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அன்னையருக்கு நிகரான அவர்களையும் வஞ்சித்து அவர்கள் வயிற்றிலடிக்க வேண்டாம் என முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ