Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கடந்த 18-ம் தேதி பணி நிரந்தரம் வழங்க வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.
அன்றைய தினம், சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் நடந்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கேயே செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று (டிசம்பர் 22) சங்க நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சரின் கோரிக்கையை சில சங்கங்கள் ஏற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர். மற்ற, 7,599 பேருக்கு காலிப்பணியிடங் களுக்கு ஏற்ப பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் செயலர் சுபின் கூறுகையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை.
8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், அதிக வேலை செய்து வருகிறோம். ஆனால், 723 பணியிடங்களை காரணம் காட்டி, மற்றவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்வோம் என்பதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இன்று
(டிசம்பர் 23) 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b