Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது.
பெறப்பட்ட படிவங்களில் ஒப்பீடு ஆகப் பெறாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்காது. இதற்காக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களால் நோட்டீஸ் அனுப்பப்படும். தொடர்ந்து உரிய விசாரணைகள் மேற்கொண்டு ஆவணங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே புதியதாகப் பெயர் சேர்க்க வேண்டிய வாக்காளர்கள் படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய வேண்டிய படிவம் 7ம், முகவரி மாற்றம், திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றுக்கு படிவம் 8ம் அளிக்க வேண்டும்.
இந்த படிவங்களுடன் ஓய்வூதிய ஆணை, பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்கள், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப பதிவேடு, ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும்.
இச்சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் டிச.27 மற்றும் 28 மற்றும் ஜன.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதற்கான மையங்களில் உரிய படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம்.
மேலும், ஜன.18 வரை அனைத்து வேலை நாட்களிலும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரடியாகவும் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b