Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)
2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ’உடன்பிறப்பே வா’ என்னும் தலைப்பில் 234 தொகுதி நிர்வாகிகளிடமும் முதலமைச்சர் கடந்த 15 நாட்களாக ’ஒன் டூ ஒன்' சந்திப்பில் ஆலோசனை நடந்து வருகிறார். இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிவாரியாக தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
(டிசம்பர் 23) 3 சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி திமுக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் முறையில் சந்தித்த மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே உள்ளதால் ேதர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வீடுகள்தோறும் சென்று விளக்க வேண்டும். அப்போது திமுக அரசு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். மேலும் அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b