தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இன்று (23.12.2025) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இன்று (23.12.2025) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுதியிருப்பதாவது,

22.12.2025 அன்று இராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் (23-ம் தேதி) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு / மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b