Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 டிசம்பர் (ஹி.ச)
தமிழக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேச வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசு இயந்திரத்தின் அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டோ ஜியோ ( FOTA - GEO ) அறிவித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையின் 187வது வாக்குறுதியான அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புதல், 309வது வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 311வது வாக்குறுதியான சமநிலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, தங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் அரசுத் தரப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யக் குழுக்களை அமைத்து காலதாமதம் ஏற்படுத்துவதையே அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தங்களுக்குக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ