Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 23 டிசம்பர் (ஹி.ச.)
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:
நானோ தொழில்நுட்பம் வெறும் அறிவியல் துறை அல்ல. அது ஒரு புரட்சியாகும். குவாண்டம் புள்ளிகள் போன்றவை 1 முதல் 10 நானோமீட்டர் அளவில் இருப்பதால், மனித ரோமத்தின் விட்டத்தை விட 10,000 மடங்கு சிறிய அளவை கொண்டதாகும். இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள பொருட்களை வடிவமைக்க உதவுகிறது.
நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வரும்கால தொழில் துறையில் முன்னிலை வகிக்கும். திராவிட மாடல் அரசு சமூக நீதியைப் பொருளாதார வளர்ச்சியின் இணைக்கிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மாற்றியமைத்துள்ளது.
சமூக நீதி, உள்ளடக்கம் மற்றும் மனித மூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-ம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பொருளாதார வளர்ச்சி உள்ளடக்கமானதாகவும் அறிவு சார்ந்ததாகவும் இருந்தாலே நிலையானது.
விலையில்லா பேருந்து பயணத் திட்டத்தின் 2021 டிசம்பரில் தொடங்கியபோது முதல் மூன்று நாட்களில் 7.8 மில்லியன் பெண்கள் பேருந்து சேவையைப் பயன்படுத்தினர். தற்போது தினசரி 57.81 லட்சம் பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
சுமார் 841 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் உயர் கல்வி செல்லும் மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் திட்டத்தை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
கல்வியும், தொழில் தேவைக்கு இடையிலான நிரப்பும் வகையில் அதேபோல நான் முதல்வன் திட்டம் கடந்த 2022-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் தொழில்சார்ந்த திறன் பயிற்சி, தொழில் வழிகாட்டுதல், தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றை வழங்குகிறது. 'புதுமைப் பெண்' திட்டத்தை மாணவிகளுக்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டங்களால் 4.18 லட்சம் மாணவிகளும், 3.28 லட்சம் மாணவர்களும் பயனடைகின்றனர். இதன் மூலம் உயர்கல்வி கிடைப்பதுடன் இடைநிற்றலை குறைக்கிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.65,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வருங்கால விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களை உருவாக்குகிறது.
இந்திய உயர்கல்வி 2020-21 ஆய்வின்படி ஆராய்ச்சி படிப்பை படிக்கும் முனைவர்களில் 15,400 மாணவிகளும், 13,457 ஆண்களும் என மொத்தம் 28,857 பேர் அடங்குவர். திராவிட மாடல் அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும். குறிப்பாக பாலின சமத்துவமின்மையை எதிர்கொள்ளும். நானோ தொழில்நுட்பமானது திறன்மிகு பேட்டரிகள், நீடித்த சூரிய தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளுக்கு முக்கியப் பங்காற்றும் இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்து 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல தலைப்புகளை உள்ளடக்கியது.
அதேபோல 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் விஐடி 7-ம் இடம் பிடித்துள்ளது. உலகளவில் 352-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த தரவரிசையில் உயர வேண்டும் என்பது இலக்காகக் கொண்டுள்ளோம்.
ஒரு நாடு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் உயர்கல்வி மூலமே முடியும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் கல்வியை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். சுகாதாரமும் கல்வியும் மத்திய, மாநில அரசுகளுக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN