Enter your Email Address to subscribe to our newsletters


தூத்துக்குடி, 23 டிசம்பர் (ஹி.ச.)
மாற்றுத்திறன் வீராங்கனையை மாத உதவித்தொகைக்காக அலைய வைக்கும் போலி சமூக நீதி மாடல் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை செல்வி. முத்துசெல்வி அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை வழங்காமல் திமுக அரசு இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிப்பதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டி உட்பட தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் தமிழகம் சார்பாக விளையாடிவரும் ஒரு மாற்றுத்திறன் மாணவிக்கு மாதம் ₹1500 வழங்க திமுக அரசிடம் பணமில்லையா? அல்லது மனமில்லையா?
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் உட்பட இரண்டு திமுக அமைச்சர்கள் இருக்கின்றனர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் தொகுதி தூத்துக்குடி தான்.
திமுக தலைவர்கள் இத்தனை பேர் தூத்துக்குடியில் இருந்தும் ஒரு மாற்றுத்திறன் வீராங்கனையை இரண்டு ஆண்டுகளாகக் கால்கடுக்க உதவித்தொகைக்காக அலைய வைப்பது தான் திமுக அரசின் சமூகநீதியா?
இது தான் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதையா? இது தான் வெல்லும் தமிழ்ப் பெண்களின் நிலையா? துணை முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களே, பதில் கூறுங்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ