Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவு காரணமாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ் மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலத்தில் சோர்வு மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. கடைசியாக ஜெயலலிதா நினைவு தினத்தின்போது, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்திருந்தார்.
தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி செயல்பட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று முன்தினம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
கீழ்ப்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், அதிமுக அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான உசேனை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam