Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால்
தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும் என்பதால்,
கூட்டாட்சி முறையை உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தை மேலும், மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஒற்றையாட்சி முறையை ஏற்படுத்தும் நோக்குடன் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக அங்குள்ள ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இரு தேசிய இனங்கள் வாழும் நாட்டில் இனவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை; அவை கண்டிக்கத்தக்கவை.
இலங்கை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான செ. கஜேந்திரன், செய்தித் தொடர்பாளர் கனகரட்ணம் சுகாஷ், பிரச்சார செயலாளர் நடராஜர் காண்டீபன் ஆகியோர் சென்னையில் என்னை சந்தித்தனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதிய கடிதத்தையும் என்னிடம் வழங்கினார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரமே கிடைக்க வாய்ப்பில்லாத வகையில், அரசியல் சட்டத்தை திருத்த சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் சதித்திட்டம் குறித்து என்னிடம் விளக்கிக் கூறினர்.
1987&ஆம் ஆண்டில் சிங்களப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருந்த போது, அங்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில் இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையே தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்துவது தான். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய ஆட்சியை உருவாக்கி, அதன் மூலம் தமிழர்கள் அவர்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள வகை செய்யப்பட்டது. ஆனால், இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு இலங்கை அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை.
இந்திய&இலங்கை ஒப்பந்தத்திற்கு செயல்வடிவம் அளிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 13&ஆம் அரசியல் சட்டத்திருத்தம், ஒப்பந்தத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, தமிழர்களை நான்காம் தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்தது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட மாகாண அரசுகளுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. பொம்மையாகவாவது இருந்து வந்த மாகாண அரசுகளும் கூட 2018&ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக இல்லாத காரணங்களைக் கூறி மாகாண தேர்தல்களை நடத்த சிங்கள அரசு மறுத்து வருகிறது.
இலங்கையில் உள்ள 9 மாகாண அவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்திய அரசும் அதன் பங்குக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அவற்றை பொருட்படுத்தாத சிங்கள அரசு, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இனி எந்தக் காலத்திலும் அரசியல் அதிகாரமும், கண்ணியமும் கிடைக்கவே கிடைக்காது.
இலங்கை இனச்சிக்கலுக்கு காரணமே அங்குள்ள தேசிய இனமான தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படாமல் அடக்கி ஆளப்பட்டது தான். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையையும் அடக்கி ஆண்ட சமூகமான தமிழர்கள், தாங்கள் அடக்கி ஆளப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் விடுதலைப் போரை தொடங்கினார்கள். உலக நாடுகளின் துணையுடன் நயவஞ்சகமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை வீழ்த்தி விட்டதாக நினைத்துக் கொண்டு தான் சிங்கள ஆட்சியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாவிட்டாலும், தமிழீழ விடுதலைப் போருக்கான காரணங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலும், எந்தக் காலத்திலும் அதிகாரம் அளிக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டால், அது ஒவ்வொரு ஈழத்தமிழரின் மனதிலும் உறங்கிக் கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் போர் உணர்வுகளை தூண்டி விட்டு விடும். அது இலங்கையின் எதிர்காலத்திற்கு எல்லா வழிகளிலும் பாதகமானதாகவே அமையும்.
இலங்கையில் அனுரா திசநாயக தலைமையிலான அரசு, தமிழர்களுக்கு எதிராகவும், ஆபத்தான பாதையிலும் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஏனெனில், இந்தியா& இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தது இந்திய அரசு தான். அதுமட்டுமின்றி, இயற்கை சீற்றம், நிதி நெருக்கடி என இலங்கை அரசு ஒவ்வொரு முறை சிக்கலில் சிக்கிக் கொள்ளும் போதும் அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி காப்பாற்றுவது இந்திய அரசு தான். அந்த வகையில் இலங்கையில் கண்ணியத்துடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழும் உரிமை சிங்கள ஆட்சியாளர்களால் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ற பெயரில் பறிக்கப்படுவதை இந்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
இலங்கையில் இன்றைய சூழலில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தனித்துவமான இறையாண்மையுடன் கூடிய, சுய நிர்ணய உரிமை கொண்ட கூட்டாட்சி முறை தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். எனவே, இலங்கையில் ஒற்றை ஆட்சி முறையை ஏற்படுத்தும் முடிவைக் கைவிட்டு, தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் படி சிங்கள ஆட்சியாளர்களுக்கு புரியும் மொழியில் இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Hindusthan Samachar / P YUVARAJ