Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கோபால் (41), சீனாவில் கப்பலில் வேலை செய்து வந்தார். கைநிறைய சம்பாதிக்கும் இவருக்கு குடும்பமும் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்திருந்தார். இதனிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், சென்னையில் தங்கும் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜனவரி 30ஆம் தேதி அந்த பெண் நடந்து சென்றபோது, கோபால் நட்பு ரீதியில் பேசிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வரும்படி அழைத்துள்ளார்.
இதற்கு அந்த இளம்பெண் மறுத்தபோதும், வற்புறுத்துவது போல நடித்து அந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார். இதையடுத்து, அந்த இளம்பெண் துணிச்சலுடன், நடந்த சம்பவம் குறித்து அடையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கோபால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வந்தனர்.
இதனிடையே, தன்னை போலீசார் தேடுவதை அறிந்த கோபால், உடனடியாக சீனாவுகுக தப்பிச்சென்றுள்ளார். தொடர்ந்து, அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் தருணத்திற்காக போலீசார் காத்திருந்து வந்துள்ளனர். அதேசமயம், அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸும் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இத்தனை மாதங்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் கோபால் சீனாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். எனினும், போலீசார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேரடியாக சென்னை விமான நிலையம் வராமல், மும்பை விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.
ஆனால், அவருக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதை அவர் அறியவில்லை. அதனால், அவர் மும்பை விமான நிலையம் இறங்கியதும், மும்பை விமான நிலைய அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து, அவர் பிடிப்பட்டது குறித்து அடையார் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார் மும்பை சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோபால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்.
சாலையில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு செய்ய முயலும் நபர்களுக்கு இது உரிய எச்சரிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN