Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
கிறிஸ்துவ மக்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வாங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் தி.நகர், பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
எனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் இணை கமிஷனர் செபாஸ் கல்யான் தலைமையில் வர்த்தகம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இன்று (டிசம்பர் 24) நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தேவாலயம் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நள்ளிரவில் பிரார்த்தனை செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல் அருண் உத்தரவுப்படி சாந்தோம், பெசன்ட் நகர், பாரிமுனையில் உள்ள அந்தோணியார் தேவாலயம், கதீட்ரல் சாலையில் உள்ள தேவாலயம், சின்னமலையில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட முக்கியமான 350க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதியில் நாளை முதல் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதியில் போலீசார் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேஸ்கள் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதியில் சந்தேக நபர்கள் சுற்றுவதை தடுக்க தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அவ்வகையில் சென்னை முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் 4 இணை ஆணையர்கள் தலைமையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பெசன்ட் நகர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தடையில் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b