Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
நாளை (டிசம்பர் 25ஆம் தேதி ) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 1, 2025 அன்று ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது. இதற்கிடையில் இன்று (டிசம்பர் 24 ) முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயண சேவை வழங்கும் நிறுவனங்கள் டிக்கெட் விலையை கிடுகிடுவென உயர்த்தி விட்டன.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேநேரம் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் அனைத்தும் காலியாகிவிட்டதால், இணைப்பு விமானங்களில் சென்னையிலிருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
சென்னை -தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,100. பெங்களூரு வழியாக சுற்றிச் செல்வதால் ரூ.13,400. சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248. பெங்களூரு வழியாக சுற்றிச் செல்வதால் ரூ.13,160. சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121. பெங்களூரு வழியாக செல்வதால் ரூ.13,842. சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ.3,093 பெங்களூரு வழியாக சென்றால் ரூ.8,688. சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. தற்போது கட்டணம் ரூ.8,448. சென்னை - திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173 பெங்களூரு வழியாக சுற்றி போவதால் ரூ.17,331 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் நெல்லை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல ரூ.1000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2400 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லைக்கு அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.3,200 முதல் 3,800 வரையும், மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,600 முதல் 3,200 வரையும், திருச்சிக்கு அதிகபட்சமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,000 முதல் 3,200 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், பேருந்துகளுக்கு அபராதம் விதித்து கூடுதல் கட்டண தொகை பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்படும், என்றனர்.
Hindusthan Samachar / vidya.b