Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச.)
இன்றைய டிஜிட்டல் உலகில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அசலான படத்திற்கும், ஏஐ உருவாக்கிய படத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமாகியுள்ளது.
டீப்பேக் மற்றும் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட படங்கள் இணையத்தில் குவியத் தொடங்கியுள்ளன. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக, கூகுள் நிறுவனம் தனது SynthID வாட்டர்மார்க்கிங் தொழில்நுட்பம் மூலம் ஏஐ உள்ளடக்கங்களைக் கண்டறியும் வசதியை ஜெமினி செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிந்த்ஐடி தொழில்நுட்பம்:
சிந்த்ஐடி என்பது கூகுள் ஏஐ மூலம் உருவாக்கப்படும் படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களில் மனிதக் கண்களுக்குத் தெரியாத ஒரு டிஜிட்டல் வாட்டர்மார்க்கைப் பொதிக்கும் ஒரு நவீன தொழில்நுட்பமாகும்.
ஒரு படத்தை நீங்கள் கிராப் செய்தாலோ, ஃபில்டர்களை மாற்றினாலோ அல்லது கம்ப்ரஸ் செய்தாலோ இந்த வாட்டர்மார்க் அழியாது.
இது படத்தையோ அல்லது வீடியோவின் தரத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது. மனிதர்களால் இதைக் காண முடியாது, ஆனால் ஜெமினி போன்ற தொழில்நுட்பங்களால் இதைக் கண்டறிய முடியும்.
ஜெமினி மூலம் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள்:
உங்கள் செல்போன் அல்லது கணினியில் உள்ள ஜெமினி செயலியைப் பயன்படுத்தி மிக எளிதாக நீங்கள் ஒரு கோப்பின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கலாம்:
முதலில் ஜெமினி செயலியைத் திறந்து, நீங்கள் சந்தேகப்படும் புகைப்படம் அல்லது வீடியோவை அதில் அப்லோட் செய்யுங்கள்.
வீடியோக்கள் 100 எம் பி அளவுக்கும், 90 வினாடிகளுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். பைல்களை பதிவேற்றிய பின், இது கூகுள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது இதில் ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேளுங்கள்.
ஜெமினி அந்த கோப்பை ஸ்கேன் செய்து, அதில் சிந்த்ஐடி வாட்டர்மார்க் உள்ளதா என்று சோதிக்கும். வீடியோக்களில் எந்தப் பகுதியில் ஆடியோ அல்லது விஷுவல் ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அது துல்லியமாகத் தெரிவிக்கும்.
2023-ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் தனது ஏஐ தயாரிப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட 20 பில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களில் இந்த சிந்த்ஐடி வாட்டர்மார்க்கைப் பயன்படுத்தியுள்ளது.
நீங்கள் சரிபார்க்கும் படம் மிகவும் குறைந்த தரம் கொண்டதாக இருந்தால், முடிவுகள் துல்லியமாக இருக்காது. ஒரு படத்தில் பல படங்கள் இணைக்கப்பட்டிருந்தால், தனித்தனிப் படங்களாக கிராப் செய்து சரிபார்ப்பது அதிகப் பலன் தரும்.
இணையத்தில் பரவும் தவறான தகவல்களைத் தவிர்க்கவும், உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இத்தகைய தொழில்நுட்பங்கள் நமக்கு ஒரு கேடயமாக அமைகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM