அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், இந்தாண்டுக்குள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு சலுகை - டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன், 24 டிசம்பர் (ஹி.ச.) அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், இந்தாண்டுக்குள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு டிரம்ப் ஆபர்


வாஷிங்டன், 24 டிசம்பர் (ஹி.ச.)

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில், ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்கள், தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலியில் (CBP) பதிவு செய்து இந்தாண்டு இறுதிக்குள் தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 2,70,738 ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனுடன் அவர்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். இதுவரை நாட்டை விட்டு வெளியேறாத காரணத்துக்காக உள்ள அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

இந்த பண்டிகை காலத்தில், CBP செயலி மூலம் முன்பதிவு செய்து வெளியேறுவதே, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உள்ள சிறந்த வாய்ப்பு. இதனை பயன்படுத்தாதவர்கள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதுடன், அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாது.

இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தகவலின்படி,

இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை , ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 19 லட்சம் பேர் தாமாக முன்வந்து வெளியேறிவிட்டனர்.

அதில் ஆயிரக்கணக்கானோர் CBP செயலியில் முன்பதிவு செய்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM