Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 24 டிசம்பர் (ஹி.ச.)
மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
இந்நிலையில், உடுப்பியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பரத் குமார் (வயது 34) என்ற நபரை கர்நாடக போலீசார் நேற்று கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பரத் குமார் பாகிஸ்தான் உளவு அமைப்பிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு இந்திய கடற்படை கப்பல்கள் குறித்த ரகசிய தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 21ம் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் (வயது 29), சாந்திரி (வயது 37) ஆகிய 2 பேரை கர்நாடக போலீசார் கைது செய்திருந்தனர். இதில், ரோகித் கொச்சி கப்பல் கட்டும் தளத்திலும், சாந்திரி உடுப்பி கப்பல் கட்டும் தளத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.
இருவரும் பணத்திற்காக கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
தற்போது பரத் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு போர் கப்பல்கள் குறித்த ரகசிய தகவல்களை அனுப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM